Thursday, September 10

ஹிஸ்டரெக்டமி (Hysterectomy)

கருப்பை அகற்றும் சிகிச்சை ஹிஸ்டரெக்டமி எனப்படுகிறது .பொதுவாக என்ன காரணங்களுக்காக செய்யப்படுகிறது என்று பார்த்தால் ,

1.மாதவிடாய் சம்பந்தமான தொந்தரவுகளுக்காக
2.அடியிறங்குதல்
3.கருப்பையில் கட்டி
4.நாள்பட்ட வெள்ளைப் போக்கு
5.கருப்பை புற்று நோய்கள்

இதில் அடியிறங்குதலிலும்,புற்று நோய்களிலும் மாற்று சிகிச்சை வேறு இல்லை என்றே சொல்லலாம் .


மாதவிடாய் சம்பந்தமான தொந்தரவுகள் :


இதில் பலவற்றிற்கு இப்போது அறுவை சிகிச்சையற்ற எளிய சிகிச்சை முறைகள் பல வந்துவிட்டன .குறிப்பாக ஹார்மோன் மாத்திரைகள் ,ஹார்மோன் லூப்புகள்(Hormone releasing IUCDs) ,அப்லேஷன்(Endometrial Ablation ) ,ஹிஸ்டரோஸ்கோபி (Hysteroscopy)மூலம் சிகிச்சைகள் என .இவற்றின் மூலம் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் .இவற்றின் மூலம் தீர்வு காணமுடியாத பட்சத்தில் அறுவை சிகிச்சை தேவைப்படலாம் .

கருப்பை கட்டிகள் :

இந்த கட்டிகளைக் கூட ஹிஸ்டராஸ்கோபி மூலம் அகற்ற முடியும் .இவற்றைக் கரைக்கவும் மருந்துகள் உண்டு .இவற்றினால் வேறு ஏதும் தொந்தரவுகள் இல்லை என்ற பட்சத்தில் இவற்றை அகற்ற வேண்டிய தேவையே இல்லை

வெள்ளைப் போக்கு :

இதற்கு காரணமான கிருமிகளைக் கண்டறிந்து சரியாக சிகிச்சை செய்தாலே போதுமானது .கருப்பை வாய் புற்று நோய் காரணமாக இந்த வெள்ளைப் போக்கு என்றால் நோயின் நிலைக்கு ஏற்ப கருப்பை அகற்ற வேண்டியது அவசியமாகலாம் .

ஏன் அதிகமாக கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன ?

1.இதை பற்றிய தெளிவான தகவல்களை பலரும் அறியாதிருப்பதால் 2.பெண்களும் ,குடும்பத்தினரும் இதை ஒரு நிரந்தர தீர்வாக கருதுவதால் (வேறு என்ன சிகிச்சை செய்தாலும் ,அறுவை சிகிச்சை பின்னர் தேவைப்படலாம் .அதற்கு இப்போதே செய்து விடலாம் )
3.பெண்கள் கருப்பை என்பது குழந்தைகள் சுமக்க மட்டுமே என்று எண்ணுவதால் .
4.மாதவிடாயிலிருந்து விடுதலைக் கிடைக்கும் என்று சில பெண்கள் கருதுவதால்

ஆனால் கருப்பையை எடுப்பதால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் பற்றி பலருக்கும் தெரியவில்லை .
1.கருப்பை எடுப்பதால் கருமுட்டை பைகளும் சில வருடங்களில் (மூன்று முதல் ஐந்து வருடங்களுக்குள் )செயலிழக்கின்றன .இதனால் பெண்களுக்கு இருதய சம்பந்தமான நோய்களுக்கு எதிரான பாதுகாப்பு குறைகிறது .
2.சில பெண்கள் ,தங்கள் பெண்மை குறைந்து விட்டதாக பயந்து மன நோய்க்கு ஆளாகின்றனர் .
3.எலும்பு தேய்மானம் அதிகரிக்கின்றது .

இவை சில மட்டுமே .அறுவை சிகிச்சைக்கு முடிவு செய்யும் முன்னர் .மருத்துவருடன் நன்றாக ஆலோசனை செய்து முடிவு எடுப்பது நல்லது.

Friday, August 14

பாப் சிமியர் (PAP SMEAR)
பாப் சிமியர் எனப்படுவது கருப்பை புற்று நோயை ஆரம்ப காலத்திலேயே கண்டுபிடிக்க உதவும் ஒரு எளிய பரிசோதனை முறையாகும் .பப்பாநிக்கலோவ் எனும் கிரேக்க மருத்துவரின் பெயரிலேயே இது இவ்வாறு அழைக்கப்படுகிறது .
பாப் சிமியருக்கு தயாராக :

மாதவிடாய் இல்லாத நேரத்தில் செய்ய வேண்டும்
இரண்டு நாட்களுக்கு உடலுறவு தவிர்ப்பது நல்லது
பிறப்பிருப்பில் மருந்துகள் ,கிரீம்கள் ஏதும் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் .

செய்யும் முறை :

மருத்துவ பரிசோதனையின் போது கருப்பை வாயிலிருந்து சைடோப்ராஷ் (cytobrush) அல்லது அயர்ஸ் ஸ்பாட்டுல்லா (Ayer's spatula) எனும் கருவியின் மூலம் சில செல்கள்(cells) அகற்றப்பட்டு ஒரு கண்ணாடி ஸ்லைடின் மேல் இடப்படுகின்றன .
இந்த செல்களை மைக்கிரோஸ்கோப் (microscope) மூலம் பார்க்கும் போது இதில் புற்று நோய் செல்கள் ஏதும் இருக்கின்றனவா இல்லை புற்று நோயாக மாறக் கூடிய செல்கள் இருக்கின்றனவா என்று கண்டறிய முடியும் .
யார் செய்து கொள்ள வேண்டும் :

1.பதினெட்டு வயது முதல் எழுபது வயதுவரை உள்ள பெண்கள் அனைவரும்
2.உடலுறவோடு கூடிய உறவில் வாழும் பெண்கள் அனைவரும் (வயது பதினெட்டுக்கு குறைவாக இருந்தாலும் அல்லது மாதவிடாய் நின்றிருந்தாலும் )
எத்தனை முறை செய்ய வேண்டும் ?

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்ய வேண்டும் .
ஆனால் ஏதேனும் காரணங்களுக்காக மருத்துவர் நீங்கள் இன்னமும் குறைந்த இடைவெளியில் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தால் அதன் படி செய்ய வேண்டும் .
பாப் சிமியர் செய்த பின் ...

உங்கள் சிமியரில் ஒன்றும் பிரச்சனை இல்லை என்னும் பட்சத்தில் நீங்கள் உங்கள் வழக்கமான அடுத்த பரிசோதனைக்கு வந்தால் போதுமானது .
ஏதேனும் பிரச்சனை இருந்தால் அடுத்த கட்ட பரிசோதனைகள் (கால்போஸ்கோப்பி -colposcopy போல ) அல்லது சிகிச்சைகள் செய்ய வேண்டியிருக்கும் .
எச்சரிக்கைகள் :

1.சில சமயங்களில் மிக மிக ஆரம்ப நிலையில் இருக்கும் சில மாற்றங்களை இந்த சிமியரினால் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம் .
2.செல்களுடன் சேர்ந்து ரத்தமோ இல்லை கருப்பை வாய் திரவங்களோ அதிகமாக இருந்தால் சரியான படி அதை சோதனை செய்ய முடியாமல் போகலாம் .
3.கருப்பைவாய் புற்றுநோயை மட்டுமே இந்த சோதனையினால் கண்டறிய முடியும்


பெண்களை பாதிக்கும் புற்று நோய்களில் இந்தியாவில் முதலிடத்தில் இருப்பது கருப்பைவாய் புற்றுநோயே .பாப் சிமியரை தொடர்ந்து செய்து கொள்வதன் மூலம் இதில் 90% வரை குறைக்க முடியும் .இது அதிகம் செலவில்லாத ஒரு எளிய சோதனை முறை .கருப்பைவாய் புற்றுநோயால் இறக்கும் பெண்களில் நான்கில் மூன்று பேர் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு முறை கூட இந்த சோதனை செய்து கொள்ளாதவர்களே .

Wednesday, July 22

அவசரநிலை கர்ப்பத்தடை மாத்திரைகள்

"எமர்ஜென்சி காண்டிராசெப்டிவ் பில்ஸ்" எனப்படும் "அவசரநிலை கர்ப்பத்தடை மாத்திரைகள்" இப்போது இந்தியாவிலும் பரவலாக கிடைக்கின்றன .
இவற்றை பற்றி மேலும் அறிந்து கொள்வோம் .


எதற்கு உபயோகிக்கலாம் ?
1.கர்ப்பத்தடை முறைகள் எதுவும் பயன்படுத்தாமல் பாதுகாப்பற்ற உடலுறவு கொள்ளும் போது கர்ப்பமாகாமல் தடுக்கவும்
2 .பாலியல் வல்லுறவை தொடர்ந்து கர்ப்பமாகாமல் தடுக்கவும்
3.பயன்படுத்திய கர்ப்பத்தடை முறைகள் சரியாக கடைபிடிக்க முடியாமல் போகும் போதும் ...


எப்போது எடுக்க வேண்டும்?
பாதுகாப்பற்ற உடலுறவை தொடர்ந்து எவ்வளவு விரைவில் முடியுமோ அத்தனை விரைவில் இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் .
அதிகபட்சமாக 72 மணி நேரத்திற்குள் இவற்றை உட்கொள்ள வேண்டும் .
ஐந்து நாட்கள் வரை இவை பாதுகாக்கக் கூடும் என்று சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன .ஆனால் நேரம் கூடக் கூட மருந்துகளின் வீரியம் நிச்சயம் குறையும் .


எப்படி கர்ப்பம் தடுக்கப்படுகிறது ?
கருமுட்டை உண்டாகாமல் தடுப்பதன் மூலமும்
கரு கர்ப்பபையில் ஊன்றாமல் தடுப்பதன் மூலமும்


எச்சரிக்கைகள்
1.மாத்திரையை உட்கொண்ட பின் தலைசுற்றல்,வாந்தி போன்றவை ஏற்படலாம்
2.மாத்திரைகள் எடுத்த மாதத்தில் மாதவிடாய் ஒரு வாரத்திற்கு மேற்பட்டு தள்ளிப் போனால்,ரத்தப் போக்கின் அளவு வெகு குறைவாக இருந்தால் கர்ப்பமாக இருக்க வாய்ப்புண்டு .
3.வயிற்று வலி ,லேசான ரத்தப் போக்கு இருந்தால் கருக் குழாயிலேயே கர்ப்பம் உண்டாகி உயிருக்கு ஆபத்தாகும் வாய்ப்பு இருக்கிறது .
4.இது எச்.ஐ.வி போன்ற நோய்களில் இருந்து பாதுகாப்பு தராது.
5.இது மாதமாத்திரைகள் ,ஆணுறைகள் போன்ற மற்ற கர்ப்பத்தடை முறைகளுக்கு மாற்று இல்லை .

Wednesday, June 3

கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பு ஊசி

எப்படி கொடுக்க வேண்டும் :

மூன்று ஊசிகளாக ...
முதல் ஊசி
அடுத்தது -இரண்டு மாதங்களுக்கு பின்
கடைசி -முதல் ஊசியிலிருந்து ஆறாவது மாதத்தில்

எவருக்கு கொடுக்கலாம் :

தற்போதைய பரிந்துரைகள் படி இதை9 முதல் 26 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு கொடுக்கலாம் .


இந்த வயதை தாண்டிய பெண்களுக்கு முன்பே எச்.பி.வி பதிப்பு இருக்கக்கூடும் என்பதால் இவர்களுக்கு தற்போது இந்த தடுப்பூசி பரிந்துரைக்கப்படுவதில்லை .இது சம்பந்தமாக இப்போது நடந்து கொண்டிருக்கும் ஆராய்ச்சிகளில் நிச்சயம் அவர்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும் என்று முடிவானால் இவர்களுக்கும் கொடுக்க முடிவாகலாம் .


அதே போல் ஆண்களுக்கு இதை கொடுப்பது பற்றியும் ஆலோசனை செய்யப்படுகிறது .(இங்கிலாந்தில் தற்போது ஆண்களுக்கும் கொடுக்கப்படுகிறது )


எச்சரிக்கைகள்:

1.ஈஸ்ட் க்கு ஒவ்வாமை உள்ளவர்கள் மற்றும் முதல் ஊசி போடப்பட்ட போதுஒவ்வாமை ஏற்பட்டவர்கள் இந்த ஊசியை போட்டுக்கொள்ள கூடாது .

2.இந்த ஊசி முதலில் சொல்லப்பட்ட நான்கு வகை எச்.பி.வி க்கு மட்டுமே எதிர்ப்பு சக்தி அளிக்கிறது .வேறு காரணங்களால் (வேறு எச்.பி.வி வகைகள் போல ) ஏற்படும் கருப்பைவாய் புற்றுநோய்க்கு எதிராக இது பாதுகாப்பளிக்காது .

3.கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கண்டிப்பாக இதை போட்டுக் கொள்ளக் கூடாது .

4.ஏற்கெனவே இந்த நான்கு வகை எச்.பி.வி பாதிப்பு இருப்பவர்களுக்கு இந்த ஊசி முழு பலனளிக்காது .

5.இந்த ஊசி போட்டுகொண்டவர்களும் வழக்கம் போலவே கருப்பை புற்றுநோய்க்கு எதிரான சோதனைகளை செய்து கொள்ள வேண்டும்

6.கருப்பை புற்றுநோய்க்கு காரணமான எச்.பி.வி கிருமிகளிடமிருந்து பாதுகாக்க மட்டுமே செய்யும் இந்த ஊசி .இது கருப்பை புற்றுநோய்க்கோ ,இந்த எச்.பி.வி யினால் வரும் வேறு நோய்க்களுக்கோ சிகிச்சை முறை இல்லை .


தற்போது இந்த தடுப்பூசி கருப்பை புற்று நோய்க்கான சிகிச்சையில் ஒரு மாபெரும் முன்னேற்றமாக போற்றப்பட்டு வருகிறது .இந்தியாவிலும் கிடைக்கிறது .இதை பற்றி மருத்துவரிடம் தகுந்த ஆலோசனை பெற்று வருமுன் காத்துக் கொள்வோம் .

கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பு ஊசி"இந்தியாவில் ஒவ்வொரு ஏழு நிமிடங்களுக்கு ஒரு பெண் கருப்பை வாய் புற்று நோய் காரணமாக மரணமடைகிறாள் "


வளர்ச்சியடைந்த பல நாடுகளில் இன்று பெண்களை பாதிக்கும் புற்றுநோயில் முதலிடத்தில் இருப்பது மார்பக புற்றுநோய் . ஆனால் இந்தியாவில் மட்டும் கருப்பை வாய் புற்றுநோயே அதிகமாக இருக்கிறது .


இந்த வகை புற்றுநோய் அதிகம் எச்.பி.வி(HPV) எனப்படும் வைரஸ் கிருமியால் வருகிறது .இது உடலுறவில் மூலமே பரவுகிறது .இந்த கிருமியில் நான்கு வகைகள் 6,11,16,18 மட்டுமே 70% நோய்க்கு காரணமாக இருக்கின்றன .இது தவிர பிறப்புறுப்பில் வரும் மருக்களுக்கு (genital warts) 90% வரை இவையே காரணமாக இருக்கின்றன .


கருப்பைவாய் புற்றுநோய் 35 முதல் 55 வயதிற்கு உட்பட்ட பெண்களில் அதிகம் காணப்படுகிறது .


இந்த நோய்க்கு எதிரான ஆராய்ச்சியின் விளைவாக இப்போது தடுப்பூசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கார்டாசில் (Gardasil )என்ற பெயரில் .இந்த ஊசி மேற்கூறிய நான்கு வகை எச்.பி.வி கிருமிகளுக்கு எதிராக எதிர்ப்பு சக்தி அளிக்கிறது .


2006ஆம் வருடம், ஜூன் மாதம் அமெரிக்க ஃப்.டி.ஏ (FDA )
மெர்க்கின் விண்ணப்பத்தை ஏற்று இதை விற்பனைக்கு அனுமதித்தது .

Thursday, April 23

தாயிலிருந்து சேய்க்கு


கர்ப்ப காலம் என்பது ஒரு பெண்ணுக்கு எத்தனை மகிழ்வான நேரம் .தாயின் பெருமைகளைப் பேசியும் பாடியும் பூரித்துப் போகிறோம்.நோயுள்ள தாயின் கருவில் இருக்கும் குழந்தைக்கும் எச்.ஐ.வி பரவ வாய்ப்பு இருக்கிறது ....
உண்மை தான் .


பல நேரங்களில் ,கர்ப்ப கால மருத்துவ சோதனைகளினாலேயே ,இந்த நோய் இருப்பது கண்டறியப்படுகிறது .கர்ப்பத்திலிருக்கும் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவ 15- 35 % வரை வாய்ப்பிருக்கிறது .


எந்தெந்த காலங்களில் இந்த நோய் பரவுகிறது என்பதை மூன்றாக பிரிக்கலாம்.
1.கர்ப்ப காலத்தில் -5-10%
2.பிரசவத்தின் போது -10-20%
3.தாய்ப்பால் கொடுக்கும் போது -5-10%


இந்த புள்ளி விவரங்கள் பலருக்கு அச்சமூட்டுபவையாக இருக்கின்றன .இதனால் நோய் பாதித்தவர்கள் குழந்தையே பெற்றுக் கொள்ளக் கூடாது என்ற கருத்தும் சிலரிடையே நிலவுகிறது .குழந்தைக்கு தாயிடமிருந்து நோய் பரவாமல் தடுக்க முடியுமா என்றால், கண்டிப்பாக முடியும் .சரியான சிகிச்சை மூலம் குழந்தைக்கு நோய் பரவுவதை <1% வரை குறைக்க முடியும் .

Saturday, April 18

புள்ளி ராஜாவுக்கு எயிட்ஸ் வருமா ?

எச்.ஐ.வி எப்படி பரவுகிறது என்பது பரவலாக அறியப்பட்டிருந்தாலும் இது குறித்த சந்தேகங்கள் பரவலாக இருக்கின்றன .ஒரே வீட்டில்
இருந்தால் வருமா ?கொசுக் கடியால் பரவுமா ?
என்பது போன்ற பல சந்தேகங்கள் இருந்துக் கொண்டே தான் இருக்கின்றன .இதன் வெளிப்பாடாக இந்த நோயாளிகளை தொடவும் பேசவும் அச்சப்பட்டுக் கொண்டு அவர்களை தீண்டத் தகாதவர்களாக்கி வேடிக்கை பார்க்கிறோம் .


கொசுக்கடியால் எச்.ஐ.வி பரவுமா ?
கண்டிப்பாக பரவாது .கொசு ரத்தத்தில் இந்த கிருமியால் உயிர் வாழ முடியாது .கொசுவால் பரவுவதாக இருந்தால் .இன்று நம் எல்லாருக்கும் எச்.ஐ.வி வந்திருக்கும் .


ஒரே படுக்கை ,ஒரே கழிவறை ,ஒரே பாத்திரங்கள் உபயோகிக்கலாமா ?
கண்டிப்பாக உபயோகிக்கலாம் .


முத்தம் கொடுப்பதால் எச்.ஐ.வி பரவுமா ?
எச்சில் ,வியர்வை ,சிறுநீர் ஆகியவற்றால் எச்.ஐ.வி பரவுவதில்லை .


தொட்டுப் பேசினால் எச்.ஐ.வி பரவுமா ?
தொடுவதால் எச்.ஐ.வி பரவாது .இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இங்கிலாந்து இளவரசி டயானா ,பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நோய் பாதித்த ஒருவருடன் கைகுலுக்கினார் .

Thursday, April 16

புள்ளி ராஜாவுக்கு எயிட்ஸ் வருமா ?

"புள்ளி ராஜாவுக்கு எயிட்ஸ் வருமா ?"
இந்த விளம்பரம் எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த செய்யப்பட்ட விளம்பரம் .இது பெரும் அளவில் பிரபலமாக இருந்தது .


ஆரம்ப காலங்களில் எச்.ஐ.வி என்பது ஓரினச் சேர்க்கையாளர்களை மட்டுமே பாதிக்கும் நோய் என்றே கருதியிருந்தனர் .பின்னர் இது ,ஊசி மூலம் போதை மருந்து எடுப்பவர்களிடமும் ,அடிக்கடி ரத்தம் ஏற்ற தேவைப்படும் ஹிமோபிலியா ( hemophilia ) நோய் இருப்பவர்கள் ,குழந்தைகள் என பலத் தரப்பினரையும் பாதிப்பது தெரிய வந்தது.


எச்.ஐ.வி கிருமி எவ்வாறு பரவுகிறது ?
1.நோயிருப்பவருடன் பாதுகாப்பற்ற (ஆணுறை இல்லாத )உடலுறவு கொள்ளும் போது


2.நோய் இருக்கும் ஒருத்தருக்கு பயன்படுத்தப்பட்ட ஊசி ,சரியாக சுத்தம் செய்யப்படாமல் இன்னொருவருக்கு பயன்படுத்தப்படும் போது


3.நோயிருப்பவரின் ரத்தம் இன்னொருவருக்கு ஏற்றப்படும் போது


4.இவை தவிர நோயுள்ள தாயின் கருவில் இருக்கும் குழந்தைக்கும் இந்த நோய் பரவ வாய்ப்பு இருக்கிறது .

Wednesday, April 15

தேடல்

ஆரம்பத்திலிருந்தே எயிட்ஸ் நோய்க்கான கிருமியை கண்டுபிடிப்பதில் பல நாட்டு அறிவியல் வல்லுனர்கள் ஈடுபட்டிருந்தனர் .

முதலில் மே 1983ல் பிரான்ஸ் நாட்டில் ,இந்த நோயை உண்டாக்கும் வைரஸ் கிருமியை தாங்கள் கண்டுபிடித்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர் .இதற்கு அப்பொழுது LAV (Lymphadenopathy associated virus ) என்று பெயர் சூட்டப்பட்டது .ஆனால் இந்த அறிவிப்பு பலரின் கவனத்தை ஈர்க்கவில்லை .

பின்னர் 1984ஏப்ரல் 23ல்,அமெரிக்க தேசிய புற்று நோய் மையத்தை சேர்ந்த டக்டர் .ராபர்ட் காலோ இந்த நோய்க்கான கிருமியை கண்டுபிடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டது .இதற்கு HTLV -III என்று பெயரிடப்பட்டது .


நாளடைவில் இந்த இரண்டு கிருமிகளும் ஒன்றே என்று தெரிய வந்தது .இதன் பின்னர் இதை எந்த பெயரில் அழைப்பது என்ற சர்ச்சை வந்தது .இதைத் தொடர்ந்து
இந்த குழப்பங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக எச்.ஐ.வி(HIV-Human Immunodeficiency Virus) என்ற பெயர் 1986 ஆம் வருடம் ,மே மாதம் அறிவிக்கப்பட்டது .

ஒரு அறிமுகம்

எயிட்ஸ் ,இந்த சொல் நம் எல்லோருக்கும் தெரிந்தது தான் .ஆனால் இதை பற்றி நாம் முற்றிலுமாக அறிந்து வைத்திருக்கிறோமா என்றால், இல்லை .இதைப் பற்றி அரைகுறை அறிவே இருக்கிறது பலரிடம் .

இந்த நோய் எங்கு ,எப்போது ஆரம்பித்தது என்பது இன்னமும் விளக்கப்படாத புதிராகவே இருக்கிறது .1981இல் வயதானவர்களிடம் மட்டுமே அதிகம் காணப்பட்ட "கபோசி சார்கோமா " என்ற ஒரு வகை புற்று நோய் சில இளைஞர்களுக்கும் வந்தது கண்டறியப்பட்டது .இதைத் தொடர்ந்து ஒரு வகை நிமோனியா காய்ச்சலும் பரவலானது .இவற்றை சேர்த்து பார்த்த போது இந்த நோய்கள் ஒரு புது நோயினால் இருக்கக் கூடும் என்ற எண்ணம் வலுத்தது .


முதலில் ,இந்த நோய் ஓரினச் சேர்க்கையாளர்களை மட்டுமே பாதிக்கும் என்றே மருத்துவர்கள் நினைத்திருந்தனர் .ஆனால் ,சில இடங்களில் ,ஊசி மூலம் போதை மருந்து எடுக்கும் பழக்கம் உள்ளவர்களும் இதனால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது .இப்படி உலக நாடுகளில் ,இந்த புது நோய் பரவுவது கண்டறியப்பட்டது .

வெவ்வேறு பேர்களில் அழைக்கப்பட்ட இந்நோய்க்கு ,1982ஆம் ஆண்டு ஜூலை மாதம் ,அமெரிக்காவில் ,வாஷிங்கடன் நகரத்தில் எயிட்ஸ் என்று பெயரிடப்பட்டது ."Acquired Immune Deficiency Syndrome " என்பதன் சுருக்கமே இந்த எயிட்ஸ் (AIDS) எனும் பெயர் .