Thursday, April 23

தாயிலிருந்து சேய்க்கு


கர்ப்ப காலம் என்பது ஒரு பெண்ணுக்கு எத்தனை மகிழ்வான நேரம் .தாயின் பெருமைகளைப் பேசியும் பாடியும் பூரித்துப் போகிறோம்.நோயுள்ள தாயின் கருவில் இருக்கும் குழந்தைக்கும் எச்.ஐ.வி பரவ வாய்ப்பு இருக்கிறது ....
உண்மை தான் .


பல நேரங்களில் ,கர்ப்ப கால மருத்துவ சோதனைகளினாலேயே ,இந்த நோய் இருப்பது கண்டறியப்படுகிறது .கர்ப்பத்திலிருக்கும் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவ 15- 35 % வரை வாய்ப்பிருக்கிறது .


எந்தெந்த காலங்களில் இந்த நோய் பரவுகிறது என்பதை மூன்றாக பிரிக்கலாம்.
1.கர்ப்ப காலத்தில் -5-10%
2.பிரசவத்தின் போது -10-20%
3.தாய்ப்பால் கொடுக்கும் போது -5-10%


இந்த புள்ளி விவரங்கள் பலருக்கு அச்சமூட்டுபவையாக இருக்கின்றன .இதனால் நோய் பாதித்தவர்கள் குழந்தையே பெற்றுக் கொள்ளக் கூடாது என்ற கருத்தும் சிலரிடையே நிலவுகிறது .குழந்தைக்கு தாயிடமிருந்து நோய் பரவாமல் தடுக்க முடியுமா என்றால், கண்டிப்பாக முடியும் .சரியான சிகிச்சை மூலம் குழந்தைக்கு நோய் பரவுவதை <1% வரை குறைக்க முடியும் .

Saturday, April 18

புள்ளி ராஜாவுக்கு எயிட்ஸ் வருமா ?

எச்.ஐ.வி எப்படி பரவுகிறது என்பது பரவலாக அறியப்பட்டிருந்தாலும் இது குறித்த சந்தேகங்கள் பரவலாக இருக்கின்றன .ஒரே வீட்டில்
இருந்தால் வருமா ?கொசுக் கடியால் பரவுமா ?
என்பது போன்ற பல சந்தேகங்கள் இருந்துக் கொண்டே தான் இருக்கின்றன .இதன் வெளிப்பாடாக இந்த நோயாளிகளை தொடவும் பேசவும் அச்சப்பட்டுக் கொண்டு அவர்களை தீண்டத் தகாதவர்களாக்கி வேடிக்கை பார்க்கிறோம் .


கொசுக்கடியால் எச்.ஐ.வி பரவுமா ?
கண்டிப்பாக பரவாது .கொசு ரத்தத்தில் இந்த கிருமியால் உயிர் வாழ முடியாது .கொசுவால் பரவுவதாக இருந்தால் .இன்று நம் எல்லாருக்கும் எச்.ஐ.வி வந்திருக்கும் .


ஒரே படுக்கை ,ஒரே கழிவறை ,ஒரே பாத்திரங்கள் உபயோகிக்கலாமா ?
கண்டிப்பாக உபயோகிக்கலாம் .


முத்தம் கொடுப்பதால் எச்.ஐ.வி பரவுமா ?
எச்சில் ,வியர்வை ,சிறுநீர் ஆகியவற்றால் எச்.ஐ.வி பரவுவதில்லை .


தொட்டுப் பேசினால் எச்.ஐ.வி பரவுமா ?
தொடுவதால் எச்.ஐ.வி பரவாது .இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இங்கிலாந்து இளவரசி டயானா ,பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நோய் பாதித்த ஒருவருடன் கைகுலுக்கினார் .

Thursday, April 16

புள்ளி ராஜாவுக்கு எயிட்ஸ் வருமா ?

"புள்ளி ராஜாவுக்கு எயிட்ஸ் வருமா ?"
இந்த விளம்பரம் எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த செய்யப்பட்ட விளம்பரம் .இது பெரும் அளவில் பிரபலமாக இருந்தது .


ஆரம்ப காலங்களில் எச்.ஐ.வி என்பது ஓரினச் சேர்க்கையாளர்களை மட்டுமே பாதிக்கும் நோய் என்றே கருதியிருந்தனர் .பின்னர் இது ,ஊசி மூலம் போதை மருந்து எடுப்பவர்களிடமும் ,அடிக்கடி ரத்தம் ஏற்ற தேவைப்படும் ஹிமோபிலியா ( hemophilia ) நோய் இருப்பவர்கள் ,குழந்தைகள் என பலத் தரப்பினரையும் பாதிப்பது தெரிய வந்தது.


எச்.ஐ.வி கிருமி எவ்வாறு பரவுகிறது ?
1.நோயிருப்பவருடன் பாதுகாப்பற்ற (ஆணுறை இல்லாத )உடலுறவு கொள்ளும் போது


2.நோய் இருக்கும் ஒருத்தருக்கு பயன்படுத்தப்பட்ட ஊசி ,சரியாக சுத்தம் செய்யப்படாமல் இன்னொருவருக்கு பயன்படுத்தப்படும் போது


3.நோயிருப்பவரின் ரத்தம் இன்னொருவருக்கு ஏற்றப்படும் போது


4.இவை தவிர நோயுள்ள தாயின் கருவில் இருக்கும் குழந்தைக்கும் இந்த நோய் பரவ வாய்ப்பு இருக்கிறது .

Wednesday, April 15

தேடல்

ஆரம்பத்திலிருந்தே எயிட்ஸ் நோய்க்கான கிருமியை கண்டுபிடிப்பதில் பல நாட்டு அறிவியல் வல்லுனர்கள் ஈடுபட்டிருந்தனர் .

முதலில் மே 1983ல் பிரான்ஸ் நாட்டில் ,இந்த நோயை உண்டாக்கும் வைரஸ் கிருமியை தாங்கள் கண்டுபிடித்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர் .இதற்கு அப்பொழுது LAV (Lymphadenopathy associated virus ) என்று பெயர் சூட்டப்பட்டது .ஆனால் இந்த அறிவிப்பு பலரின் கவனத்தை ஈர்க்கவில்லை .

பின்னர் 1984ஏப்ரல் 23ல்,அமெரிக்க தேசிய புற்று நோய் மையத்தை சேர்ந்த டக்டர் .ராபர்ட் காலோ இந்த நோய்க்கான கிருமியை கண்டுபிடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டது .இதற்கு HTLV -III என்று பெயரிடப்பட்டது .


நாளடைவில் இந்த இரண்டு கிருமிகளும் ஒன்றே என்று தெரிய வந்தது .இதன் பின்னர் இதை எந்த பெயரில் அழைப்பது என்ற சர்ச்சை வந்தது .இதைத் தொடர்ந்து
இந்த குழப்பங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக எச்.ஐ.வி(HIV-Human Immunodeficiency Virus) என்ற பெயர் 1986 ஆம் வருடம் ,மே மாதம் அறிவிக்கப்பட்டது .

ஒரு அறிமுகம்

எயிட்ஸ் ,இந்த சொல் நம் எல்லோருக்கும் தெரிந்தது தான் .ஆனால் இதை பற்றி நாம் முற்றிலுமாக அறிந்து வைத்திருக்கிறோமா என்றால், இல்லை .இதைப் பற்றி அரைகுறை அறிவே இருக்கிறது பலரிடம் .

இந்த நோய் எங்கு ,எப்போது ஆரம்பித்தது என்பது இன்னமும் விளக்கப்படாத புதிராகவே இருக்கிறது .1981இல் வயதானவர்களிடம் மட்டுமே அதிகம் காணப்பட்ட "கபோசி சார்கோமா " என்ற ஒரு வகை புற்று நோய் சில இளைஞர்களுக்கும் வந்தது கண்டறியப்பட்டது .இதைத் தொடர்ந்து ஒரு வகை நிமோனியா காய்ச்சலும் பரவலானது .இவற்றை சேர்த்து பார்த்த போது இந்த நோய்கள் ஒரு புது நோயினால் இருக்கக் கூடும் என்ற எண்ணம் வலுத்தது .


முதலில் ,இந்த நோய் ஓரினச் சேர்க்கையாளர்களை மட்டுமே பாதிக்கும் என்றே மருத்துவர்கள் நினைத்திருந்தனர் .ஆனால் ,சில இடங்களில் ,ஊசி மூலம் போதை மருந்து எடுக்கும் பழக்கம் உள்ளவர்களும் இதனால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது .இப்படி உலக நாடுகளில் ,இந்த புது நோய் பரவுவது கண்டறியப்பட்டது .

வெவ்வேறு பேர்களில் அழைக்கப்பட்ட இந்நோய்க்கு ,1982ஆம் ஆண்டு ஜூலை மாதம் ,அமெரிக்காவில் ,வாஷிங்கடன் நகரத்தில் எயிட்ஸ் என்று பெயரிடப்பட்டது ."Acquired Immune Deficiency Syndrome " என்பதன் சுருக்கமே இந்த எயிட்ஸ் (AIDS) எனும் பெயர் .