Thursday, September 10

ஹிஸ்டரெக்டமி (Hysterectomy)

கருப்பை அகற்றும் சிகிச்சை ஹிஸ்டரெக்டமி எனப்படுகிறது .பொதுவாக என்ன காரணங்களுக்காக செய்யப்படுகிறது என்று பார்த்தால் ,

1.மாதவிடாய் சம்பந்தமான தொந்தரவுகளுக்காக
2.அடியிறங்குதல்
3.கருப்பையில் கட்டி
4.நாள்பட்ட வெள்ளைப் போக்கு
5.கருப்பை புற்று நோய்கள்

இதில் அடியிறங்குதலிலும்,புற்று நோய்களிலும் மாற்று சிகிச்சை வேறு இல்லை என்றே சொல்லலாம் .


மாதவிடாய் சம்பந்தமான தொந்தரவுகள் :


இதில் பலவற்றிற்கு இப்போது அறுவை சிகிச்சையற்ற எளிய சிகிச்சை முறைகள் பல வந்துவிட்டன .குறிப்பாக ஹார்மோன் மாத்திரைகள் ,ஹார்மோன் லூப்புகள்(Hormone releasing IUCDs) ,அப்லேஷன்(Endometrial Ablation ) ,ஹிஸ்டரோஸ்கோபி (Hysteroscopy)மூலம் சிகிச்சைகள் என .இவற்றின் மூலம் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் .இவற்றின் மூலம் தீர்வு காணமுடியாத பட்சத்தில் அறுவை சிகிச்சை தேவைப்படலாம் .

கருப்பை கட்டிகள் :

இந்த கட்டிகளைக் கூட ஹிஸ்டராஸ்கோபி மூலம் அகற்ற முடியும் .இவற்றைக் கரைக்கவும் மருந்துகள் உண்டு .இவற்றினால் வேறு ஏதும் தொந்தரவுகள் இல்லை என்ற பட்சத்தில் இவற்றை அகற்ற வேண்டிய தேவையே இல்லை

வெள்ளைப் போக்கு :

இதற்கு காரணமான கிருமிகளைக் கண்டறிந்து சரியாக சிகிச்சை செய்தாலே போதுமானது .கருப்பை வாய் புற்று நோய் காரணமாக இந்த வெள்ளைப் போக்கு என்றால் நோயின் நிலைக்கு ஏற்ப கருப்பை அகற்ற வேண்டியது அவசியமாகலாம் .

ஏன் அதிகமாக கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன ?

1.இதை பற்றிய தெளிவான தகவல்களை பலரும் அறியாதிருப்பதால் 2.பெண்களும் ,குடும்பத்தினரும் இதை ஒரு நிரந்தர தீர்வாக கருதுவதால் (வேறு என்ன சிகிச்சை செய்தாலும் ,அறுவை சிகிச்சை பின்னர் தேவைப்படலாம் .அதற்கு இப்போதே செய்து விடலாம் )
3.பெண்கள் கருப்பை என்பது குழந்தைகள் சுமக்க மட்டுமே என்று எண்ணுவதால் .
4.மாதவிடாயிலிருந்து விடுதலைக் கிடைக்கும் என்று சில பெண்கள் கருதுவதால்

ஆனால் கருப்பையை எடுப்பதால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் பற்றி பலருக்கும் தெரியவில்லை .
1.கருப்பை எடுப்பதால் கருமுட்டை பைகளும் சில வருடங்களில் (மூன்று முதல் ஐந்து வருடங்களுக்குள் )செயலிழக்கின்றன .இதனால் பெண்களுக்கு இருதய சம்பந்தமான நோய்களுக்கு எதிரான பாதுகாப்பு குறைகிறது .
2.சில பெண்கள் ,தங்கள் பெண்மை குறைந்து விட்டதாக பயந்து மன நோய்க்கு ஆளாகின்றனர் .
3.எலும்பு தேய்மானம் அதிகரிக்கின்றது .

இவை சில மட்டுமே .அறுவை சிகிச்சைக்கு முடிவு செய்யும் முன்னர் .மருத்துவருடன் நன்றாக ஆலோசனை செய்து முடிவு எடுப்பது நல்லது.