பாப் சிமியர் எனப்படுவது கருப்பை புற்று நோயை ஆரம்ப காலத்திலேயே கண்டுபிடிக்க உதவும் ஒரு எளிய பரிசோதனை முறையாகும் .பப்பாநிக்கலோவ் எனும் கிரேக்க மருத்துவரின் பெயரிலேயே இது இவ்வாறு அழைக்கப்படுகிறது .
பாப் சிமியருக்கு தயாராக :
மாதவிடாய் இல்லாத நேரத்தில் செய்ய வேண்டும்
இரண்டு நாட்களுக்கு உடலுறவு தவிர்ப்பது நல்லது
பிறப்பிருப்பில் மருந்துகள் ,கிரீம்கள் ஏதும் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் .
செய்யும் முறை :
மருத்துவ பரிசோதனையின் போது கருப்பை வாயிலிருந்து சைடோப்ராஷ் (cytobrush) அல்லது அயர்ஸ் ஸ்பாட்டுல்லா (Ayer's spatula) எனும் கருவியின் மூலம் சில செல்கள்(cells) அகற்றப்பட்டு ஒரு கண்ணாடி ஸ்லைடின் மேல் இடப்படுகின்றன .
இந்த செல்களை மைக்கிரோஸ்கோப் (microscope) மூலம் பார்க்கும் போது இதில் புற்று நோய் செல்கள் ஏதும் இருக்கின்றனவா இல்லை புற்று நோயாக மாறக் கூடிய செல்கள் இருக்கின்றனவா என்று கண்டறிய முடியும் .
யார் செய்து கொள்ள வேண்டும் :
1.பதினெட்டு வயது முதல் எழுபது வயதுவரை உள்ள பெண்கள் அனைவரும்
2.உடலுறவோடு கூடிய உறவில் வாழும் பெண்கள் அனைவரும் (வயது பதினெட்டுக்கு குறைவாக இருந்தாலும் அல்லது மாதவிடாய் நின்றிருந்தாலும் )
எத்தனை முறை செய்ய வேண்டும் ?
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்ய வேண்டும் .
ஆனால் ஏதேனும் காரணங்களுக்காக மருத்துவர் நீங்கள் இன்னமும் குறைந்த இடைவெளியில் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தால் அதன் படி செய்ய வேண்டும் .
பாப் சிமியர் செய்த பின் ...
உங்கள் சிமியரில் ஒன்றும் பிரச்சனை இல்லை என்னும் பட்சத்தில் நீங்கள் உங்கள் வழக்கமான அடுத்த பரிசோதனைக்கு வந்தால் போதுமானது .
ஏதேனும் பிரச்சனை இருந்தால் அடுத்த கட்ட பரிசோதனைகள் (கால்போஸ்கோப்பி -colposcopy போல ) அல்லது சிகிச்சைகள் செய்ய வேண்டியிருக்கும் .
எச்சரிக்கைகள் :
1.சில சமயங்களில் மிக மிக ஆரம்ப நிலையில் இருக்கும் சில மாற்றங்களை இந்த சிமியரினால் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம் .
2.செல்களுடன் சேர்ந்து ரத்தமோ இல்லை கருப்பை வாய் திரவங்களோ அதிகமாக இருந்தால் சரியான படி அதை சோதனை செய்ய முடியாமல் போகலாம் .
3.கருப்பைவாய் புற்றுநோயை மட்டுமே இந்த சோதனையினால் கண்டறிய முடியும்
பெண்களை பாதிக்கும் புற்று நோய்களில் இந்தியாவில் முதலிடத்தில் இருப்பது கருப்பைவாய் புற்றுநோயே .பாப் சிமியரை தொடர்ந்து செய்து கொள்வதன் மூலம் இதில் 90% வரை குறைக்க முடியும் .இது அதிகம் செலவில்லாத ஒரு எளிய சோதனை முறை .கருப்பைவாய் புற்றுநோயால் இறக்கும் பெண்களில் நான்கில் மூன்று பேர் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு முறை கூட இந்த சோதனை செய்து கொள்ளாதவர்களே .